வட்டார செயல்பாடுகள் புகைப்படங்களாக உங்கள் பார்வைக்கு

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி - நாகப்பட்டினம் மாவட்டம்

Saturday, 16 November 2013

அரசுப் பள்ளி மாணவர்கள் சாதனை! மோ.கணேசன்



சிறந்த அறிவியல் யோசனைகளுக்காகவும் கண்டுபிடிப்புகளுக்காகவும் ‘இக்னைட் விருது’ பெற  தேர்வு செய்யப்பட்டுள்ள பள்ளி மாணவர்களுக்கு,  அகமதாபாத்தில் நவம்பர் 19-ஆம் தேதி நடைபெறும் விழாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் விருது வழங்கி கௌரவிக்கிறார்.

புதுமையான அறிவியல் யோசனைகள் மற்றும் சிறந்த அறிவியல் கண்டுபிடிப்புகளுக்காக, தமிழகப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள், மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறையைச் சேர்ந்த நேஷனல் இன்னவேஷன் ஃபவுண்டேஷன் வழங்கும் ‘இக்னைட் விருது’ பெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நன்னிலம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர் ஆர். சந்தோஷ், காட்பாடியிலுள்ள திருமுருக கிருபானந்தவாரியார்  அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கரண், சித்தார்த்தன் ஆகியோரும் இந்தப் போட்டியில் வெற்றி வாகைசூடி அரசுப் பள்ளிகளுக்குப் பெருமை  சேர்த்துள்ளனர்.

புட்போர்டு பயணம் செய்தால் அந்த பஸ் நகராது. இதற்காக ‘ஸ்டெப் லாக் சிஸ்டம்’ என்ற யோசனையை அளித்துள்ளார் திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஆர். சந்தோஷ். இந்த யோசனை அவருக்கு வெற்றியைத் தேடித் தந்துள்ளது. “பஸ் படிக்கட்டுகளில் நிறையபேர் தொங்கிக் கொண்டு போவதால் நிறைய விபத்துகள் நடக்கின்றன. இதனை எப்படி தடுக்கலாம்னு பஸ்ஸில போகும்போது யோசிச்சேன். அப்ப தோணின ஐடியாதான் இது. படியில் யார் நின்னாலும் வண்டி ஸ்டார்ட் ஆகாது. அதுக்காக படியில ஒரு கருவி பொருத்தணும். சைடு பாக்கறது, ஆள் ஏறிட்டாங்களான்னு பாக்கறதுக்காக கண்டக்டர் மட்டும் படியில நின்னுக்கலாம். அவர் ஷுவுலயோ, செருப்புலயோ ஒரு கருவியை பொருத்திடணும்.

இப்படி செஞ்சிட்டா கண்டக்டரைத் தவிர படியில யாரும் நிக்க முடியாது. அவங்க பஸ்ஸை எடுங்கன்னு டிரைவர்கிட்ட சண்டையும் போடமுடியாது” என்கிறார். இவரது எதிர்கால ஆசை, ஏரோநாட்டிக்கல் என்ஜினீயரிங் படிக்க வேண்டும் என்பதுதான். சென்ற ஆண்டுக்கான இக்னைட் விருதை இதே பள்ளியில் படித்த கிருஷ்ணகுமார் என்ற மாணவர் பெற்றிருக்கிறார்.

சார்ஜரை மறந்து வைத்துவிட்டு செல்போன் ஸ்விட்ச் ஆஃப் ஆகி துன்பப்பட்டவர்கள் பலர் உண்டு. செல்போனிலேயே சார்ஜர் இருந்தால்  வசதியாக இருக்குமே. இதற்கான  யோசனையைச் சொல்லி இக்னைட் விருதுக்கு தேர்வு பெற்றுள்ளனர் வேலூர், காட்பாடியிலுள்ள திருமுருக கிருபானந்த வாரியார் அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கரண், சித்தார்த்தன். “நான், என் தம்பி கரண், என் அப்பா என மூன்று பேரும் போன வருஷம் சபரிமலைக்குச் சென்றிருந்தோம். அப்போ நாங்க செல்போன் சார்ஜரை எடுத்துகிட்டுப் போகாம போனதால, ரொம்பவும் சிரமப்பட்டுட்டோம். அங்க இருந்தவங்ககிட்ட சார்ஜரை கேட்டபோது யாருமே தரல. இதனால நாங்க ரொம்பவும் நொந்துட்டோம். அப்போ நானும் என் தம்பியும் ‘இதுக்கு என்ன மாற்றுவழின்னு’ யோசிச்சபோதுதான் செல்போன்லயே சார்ஜர் இருக்கும்படி இருந்தா எப்படி இருக்கும்னு யோசிச்சோம். அதையே ஐடியாவாக்கிட்டோம்” என்கிறார் கரண். “எங்களோட ஐடியாவின்படி செல்போனிலேயே சார்ஜரைப்  பொருத்தி இருக்கிறோம். இப்போது செல்போனில் சார்ஜ் ஏறும்போது நிறைய பேர் செல்போனில் பேசிக்கொண்டு இருப்பார்கள். அது அபாயகரமானது என்றாலும் யாரும் கேட்பதில்லை. எங்களது யோசனைப்படி, செல்போனை சார்ஜ் செய்யும் போது, போன் பேசமுடியாது” என்கிறார் சித்தார்த்தன். இதே பள்ளியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் கரண் பிளஸ் டூவும், சித்தார்த்தன் பிளஸ் ஒன்னும் படித்து வருகின்றனர். கரண் எதிர்காலத்தில் கணிதத்தில் பிஎச்.டி. படிப்பதற்கும், சித்தார்த்தன் ஏரோநாட்டிக்கல் என்ஜினீயரிங் படிப்பதற்கும் திட்டமிட்டிருக்கிறார்கள்.

“நான் கண்டுபிடித்திருக்கும் ‘அட்ஜஸ்டபிள் எலக்ட்ரிசிட்டி எக்ஸ்டென்ஷன் போர்டு’ என்பது ஒரு வகை பிளக் பாய்ண்ட் . இதில், ஃபேன், மிக்சி, கிரைண்டர், ஓவன் உட்பட அனைத்து வகையான பிளக்குகளையும், இந்த ஒரே சாதனத்தில் பொருத்திக்கொள்ளலாம். அதிகபட்சமாக 17-க்கும் மேற்பட்ட பிளக்குகளை  இதில் பொருத்தலாம். உலக அளவில் 156 நாடுகளில், 8 விதமான பிளக்குகள் நடைமுறையில் உள்ளன. ஒரு நாட்டில் உள்ள பிளக்குகளை, அடுத்த நாட்டில் உள்ள சாக்கெட்டுகளில் பொருத்த முடியாது. ஆனால், இந்த மின் சாதனத்தில், உலகத்தில் உள்ள 8 விதமான பிளக்குகளையும் இதில் பொருத்தி, மின்சாரம் பெற்றுக்கொள்ள முடியும்” என்கிறார் 11-ஆம் வகுப்பு மாணவரான டெனித் ஆதித்யா. இவர் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு இந்து மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர். எதிர்காலத்தில் விஞ்ஞானி ஆக வேண்டும் என்பது அவரது கனவு.

“மலைப்பகுதி சாலைகளில் லாரி போன்ற பெரிய வண்டிகளை நிறுத்த வேண்டுமானால் டிரைவரை தவிர்த்து கூடுதலாக நான்கு பேர் தேவை. இடையில் வண்டி நின்றுவிட்டால் சட்டென்று கீழே இறங்கி, நான்கு பக்க சக்கரங்களில் கல்லோ, கட்டைகளோ வைக்க வேண்டும். அதை ஒரு மெஷின் செய்யும்படி வடிவமைப்பு செய்ய வேண்டும். இப்படிச் செய்தால் மலைச்சரிவில் இருக்கும், அந்த வாகனத்தை  டிரைவர் ஒருவரே, உட்கார்ந்த இடத்தில் இருந்து நிறுத்த முடியும். இந்த ஐடியாவிற்குத்தான்  விருது கிடைத்திருக்கிறது” என்கிறார், ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் உள்ள எஸ்.ஆர்.சி. மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வரும் பவித்ரா. ‘பிளாண்ட் ரிமூவர்’, களை எடுத்தல் கருவி, உரமிடும் கருவி போன்றவற்றையும் வடிமைத்திருப்பது மட்டுமின்றி, பல்வேறு போட்டிகளில் இதற்காக பரிசுகளையும் இவர் வென்றிருக்கிறார். டாக்டராக வேண்டும் என்பது இவரது எதிர்கால லட்சியம்.

“காரில் ஓர் அலாரம் பொருத்தப்பட்டிருக்கும். காருக்குள் எப்போது ஆக்சிஜன் குறைவாக இருக்கிறதோ அப்போது அலாரம் அடிக்கும். உடனே காரின் கண்ணாடிகளை திறந்துகொள்ளலாம். காரில் இருப்பவர் தூங்கிக் கொண்டிருக்கிறார், அலாரம் அடித்தும் அவர் எழவில்லை என்றால் கார் கண்ணாடி  தானாக திறந்து கொள்ளும்படி வடிவமைத்திருக்கிறேன்” என்கிறார், எஸ்.ஆர். வளவா. சென்னை, கல்பாக்கத்தில் உள்ள அட்டாமிக் எனர்ஜி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகிறார் அவர்.

இக்னைட் விருது பெற தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவர்களுக்கு அகமதாபாத்தில் நவம்பர் 19-ஆம் தேதி நடைபெறும் விழாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் விருது வழங்குகிறார். அத்துடன், இந்த மாணவர்களின் யோசனைகள் கண்டுபிடிப்புகளாக வடிவமைக்கப்பட்டு அங்கு காட்சிக்கு வைக்கப்படும்.


நீங்களும் வெல்லலாம்!
2014-ஆம் ஆண்டுக்கான ‘இக்னைட்-14’ போட்டி அறிவிப்பு வெளியாகிவிட்டது. இப்போட்டியில் ஒன்றாம் வகுப்பிலிருந்து 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் அனைத்துப் பள்ளி மாணவர்களும் பங்கு கொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.8.2014.

விவரங்களுக்கு: http://nif.org.in/ignite/submit_idea.php

செல்போன் மூலம் ஆங்கிலம் கற்பிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்!



கம்ப்யூட்டர், செல்போன் போன்ற நவீன தகவல் தொழில்நுட்பச் சாதனங்களைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு எளிய முறையில் கற்பித்து வருகிறார், செஞ்சி வட்டம் சத்தியமங்கலம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் திலீப்.

மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க கம்ப்யூட்டரையும், செல்போனையும் அவர் எப்படிப் பயன்படுத்துகிறார்? சிறு வயது முதலே எனக்கு கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாடுவதில் அதிக ஆர்வம். அந்த ஆர்வத்தால், சி, ஜாவா போன்ற கம்ப்யூட்டர் மொழிகளைக் கற்றுக்கொண்டேன். அதனால், ஆசிரியரான பிறகு, தகவல் தொழில்நுட்பச் சாதனங்களின் மீது எனக்கிருக்கும் ஆர்வத்தால், அந்தச் சாதனங்களின் உதவியுடன் மாணவர்களுக்குப் பாடம் நடத்த ஆரம்பித்தேன். பவர்பாயிண்ட் உதவியுடன் படங்கள் மூலமாக பாடங்களையும், ஆங்கில வார்த்தைகளையும் கற்றுத் தர ஆரம்பித்தேன். பள்ளிக்கு அரசு வழங்கிய கம்ப்யூட்டர் மற்றும் புரஜெக்ட்டரை இதற்காக நன்கு பயன்படுத்திக் கொண்டேன். செல்போன், லேப்டாப், யூ டியூபில் உள்ள கல்வி சம்பந்தமான காணொளிக் காட்சிகள் மற்றும் டிஜிட்டல் கேமரா போன்றவற்றைப் பயன்படுத்தி தற்போது பாடம் நடத்துகிறேன். செல்போன் உதவியுடன் மனப்பாடப் பாடல்களை நானே என் நண்பர்களுடன் இணைந்து பாடி, பதிவு செய்து, அதனை மாணவர்களுக்கு வகுப்பறையில் ஒலிபெருக்கியின் மூலம் இயக்கச் செய்து எளிய முறையில் கற்பிக்கிறேன். அதனால் மாணவர்கள் மிக விரைவில் மனப்பாடப் பாடல்களை கற்றுக்கொள்கிறார்கள். மெமரி கார்டில் அந்தப் பாடல்களை பதிவு செய்து அளிப்பதால், மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே அவற்றைக் கேட்டு, பிழையின்றி மனப்பாடம் செய்துகொள்ள முடிகிறது. ஆண்ட்ராய்டு அப்ளிக்கேஷன் உதவியுடனும் ஆங்கிலம் கற்பித்து வருகிறேன்" என்னும் திலீப், இந்த ஆண்டு தேசிய அளவிலான நல்லாசிரியர் விருதை குடியரசுத் தலைவரிடமிருந்து பெற்றவர்.

மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்துவதற்காக, ஆங்கிலப் பாடங்களை அவர்களைக் கொண்டே வாசிக்கச் செய்து அதனை செல்போனில் பதிவு செய்து, வகுப்பறையில் உள்ள புரஜெக்ட்டரில் திரையிடுகிறார். மாணவர்கள், தாங்கள் வாசித்தவற்றை மீண்டும் கூர்ந்து கேட்கும்போது, தாங்கள் செய்துள்ள பிழைகளை மாணவர்களால் எளிதாகக் கண்டறியும் முடியும் என்கிறார் அவர். தான் கற்பிக்கும் முறையை பிற பள்ளி மாணவர்களும் பார்த்துப் பயன்பெற வேண்டுமென்ற நோக்கில், dhilipteacher.blogspot.in என்ற வலைப்பூவையும் உருவாக்கியுள்ளார் ஆசிரியர் திலீப்.

ஆங்கிலத்தில் உள்ள கடினமான வார்த்தைகளை நாங்கள் சரியாக உச்சரிக்கிறோமா என்பதை TALK IT என்ற மென்பொருளின் மூலம் தெரிந்துகொள்கிறோம். இதனை எங்கள் ஆங்கில ஆசிரியர் தனது லேப்டாப்பில் பதிவேற்றம் செய்துவைத்துள்ளார். நாங்கள் செய்த பிழைகளை மொபைல் போனில் பதிவு செய்து, மீண்டும் போட்டுக்காட்டி திருத்திக் கொள்ளச் செய்வார். பிற பள்ளி மாணவர்களுடன் SKYPE தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உரையாடுவது, கேமராவில் படம் பிடித்து சிறு சிறு கதைகளை நாங்களே சொல்வது, குறிப்பிட்ட தலைப்பில் படம் வரைந்து அதிலுள்ள பொருட்களுக்கு ஆங்கிலத்தில் பாகம் குறிப்பது என்று பல்வேறு செயல்களின் மூலம் எங்களின் ஆங்கில அறிவை வளர்த்து வருகிறார் ஆசிரியர் திலீப்" என்று புகழாரம் சூட்டுகிறார்கள் அவரது மாணவர்கள் திவ்யா, திருவங்கம், பவுன்ராஜ் ஆகியோர்.