ஆசிரியர்களுக்கு சேமநல நிதிக் கணக்கீட்டுத் தாள்
வழங்கக் கோரிக்கை
First Published : 29 Nov 2011 01:39:37 PM IST
நாகப்பட்டினம், நவ. 28: ஆசிரியர்களுக்கு சேமநல நிதிக் கணக்கீட்டுத் தாள் வழங்க நாகை மாவட்டத் தொடக்கக் கல்வி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நாகை மாவட்டப் பொதுக் குழுக் கூட்டம், நாகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் ப. முருகபாஸ்கரன் தலைமை வகித்தார்.
மாநிலத் துணைத் தலைவர் இரா. முத்துகிருஷ்ணன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் கோ. ராமகிருஷ்ணன், மாநிலப் பொதுக் குழு உறுப்பினர்கள் தங்க. மோகன், பி. பன்னீர்செல்வம், சி. பிரபா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சங்கத்தின் மாவட்டச் செயலாளர் மு. லட்சுமிநாராயணன், சங்கத்தின் எதிர்காலப் பணிகளை விளக்கிப் பேசினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
மாநில அமைப்பின் முடிவின்படி, சங்கத்தின் மகளிருக்கான அமைப்பைத் தொடங்கி, வட்ட மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்களை நியமிப்பது. ஓய்வுப் பெற்ற ஆசிரியர்களுக்கான பிரிவை விரைவில் தொடங்குவது. அமைப்பின் ஒரு நாள் இயக்கப் பணிமனையை மயிலாடுதுறையில் நடத்துவது, இலவசப் பாடப் புத்தகங்களைப் பள்ளிக்கு எடுத்துச் செல்வதற்காக வழங்கப்பட்ட தொகையைத் தலைமையாசிரியர்களுக்குப் பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்டத் தொடக்கக் கல்வி நிர்வாகத்தை வலியுறுத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்டப் பொருளாளர் ப. ஜோதி நன்றி கூறினார்.