வட்டார செயல்பாடுகள் புகைப்படங்களாக உங்கள் பார்வைக்கு

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி - நாகப்பட்டினம் மாவட்டம்

Saturday, 16 November 2013

செல்போன் மூலம் ஆங்கிலம் கற்பிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்!



கம்ப்யூட்டர், செல்போன் போன்ற நவீன தகவல் தொழில்நுட்பச் சாதனங்களைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு எளிய முறையில் கற்பித்து வருகிறார், செஞ்சி வட்டம் சத்தியமங்கலம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் திலீப்.

மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க கம்ப்யூட்டரையும், செல்போனையும் அவர் எப்படிப் பயன்படுத்துகிறார்? சிறு வயது முதலே எனக்கு கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாடுவதில் அதிக ஆர்வம். அந்த ஆர்வத்தால், சி, ஜாவா போன்ற கம்ப்யூட்டர் மொழிகளைக் கற்றுக்கொண்டேன். அதனால், ஆசிரியரான பிறகு, தகவல் தொழில்நுட்பச் சாதனங்களின் மீது எனக்கிருக்கும் ஆர்வத்தால், அந்தச் சாதனங்களின் உதவியுடன் மாணவர்களுக்குப் பாடம் நடத்த ஆரம்பித்தேன். பவர்பாயிண்ட் உதவியுடன் படங்கள் மூலமாக பாடங்களையும், ஆங்கில வார்த்தைகளையும் கற்றுத் தர ஆரம்பித்தேன். பள்ளிக்கு அரசு வழங்கிய கம்ப்யூட்டர் மற்றும் புரஜெக்ட்டரை இதற்காக நன்கு பயன்படுத்திக் கொண்டேன். செல்போன், லேப்டாப், யூ டியூபில் உள்ள கல்வி சம்பந்தமான காணொளிக் காட்சிகள் மற்றும் டிஜிட்டல் கேமரா போன்றவற்றைப் பயன்படுத்தி தற்போது பாடம் நடத்துகிறேன். செல்போன் உதவியுடன் மனப்பாடப் பாடல்களை நானே என் நண்பர்களுடன் இணைந்து பாடி, பதிவு செய்து, அதனை மாணவர்களுக்கு வகுப்பறையில் ஒலிபெருக்கியின் மூலம் இயக்கச் செய்து எளிய முறையில் கற்பிக்கிறேன். அதனால் மாணவர்கள் மிக விரைவில் மனப்பாடப் பாடல்களை கற்றுக்கொள்கிறார்கள். மெமரி கார்டில் அந்தப் பாடல்களை பதிவு செய்து அளிப்பதால், மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே அவற்றைக் கேட்டு, பிழையின்றி மனப்பாடம் செய்துகொள்ள முடிகிறது. ஆண்ட்ராய்டு அப்ளிக்கேஷன் உதவியுடனும் ஆங்கிலம் கற்பித்து வருகிறேன்" என்னும் திலீப், இந்த ஆண்டு தேசிய அளவிலான நல்லாசிரியர் விருதை குடியரசுத் தலைவரிடமிருந்து பெற்றவர்.

மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்துவதற்காக, ஆங்கிலப் பாடங்களை அவர்களைக் கொண்டே வாசிக்கச் செய்து அதனை செல்போனில் பதிவு செய்து, வகுப்பறையில் உள்ள புரஜெக்ட்டரில் திரையிடுகிறார். மாணவர்கள், தாங்கள் வாசித்தவற்றை மீண்டும் கூர்ந்து கேட்கும்போது, தாங்கள் செய்துள்ள பிழைகளை மாணவர்களால் எளிதாகக் கண்டறியும் முடியும் என்கிறார் அவர். தான் கற்பிக்கும் முறையை பிற பள்ளி மாணவர்களும் பார்த்துப் பயன்பெற வேண்டுமென்ற நோக்கில், dhilipteacher.blogspot.in என்ற வலைப்பூவையும் உருவாக்கியுள்ளார் ஆசிரியர் திலீப்.

ஆங்கிலத்தில் உள்ள கடினமான வார்த்தைகளை நாங்கள் சரியாக உச்சரிக்கிறோமா என்பதை TALK IT என்ற மென்பொருளின் மூலம் தெரிந்துகொள்கிறோம். இதனை எங்கள் ஆங்கில ஆசிரியர் தனது லேப்டாப்பில் பதிவேற்றம் செய்துவைத்துள்ளார். நாங்கள் செய்த பிழைகளை மொபைல் போனில் பதிவு செய்து, மீண்டும் போட்டுக்காட்டி திருத்திக் கொள்ளச் செய்வார். பிற பள்ளி மாணவர்களுடன் SKYPE தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உரையாடுவது, கேமராவில் படம் பிடித்து சிறு சிறு கதைகளை நாங்களே சொல்வது, குறிப்பிட்ட தலைப்பில் படம் வரைந்து அதிலுள்ள பொருட்களுக்கு ஆங்கிலத்தில் பாகம் குறிப்பது என்று பல்வேறு செயல்களின் மூலம் எங்களின் ஆங்கில அறிவை வளர்த்து வருகிறார் ஆசிரியர் திலீப்" என்று புகழாரம் சூட்டுகிறார்கள் அவரது மாணவர்கள் திவ்யா, திருவங்கம், பவுன்ராஜ் ஆகியோர்.

No comments:

Post a Comment